காசா விவகாரத்தில் ஐ.நா செயல்பாடு குறித்து துருக்கி அதிபர் ஆவேசம்


அங்காரா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தநிலையில், ஐ.நா அமைப்பை துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, “ஐ.நா-வின் ஆன்மா காசாவில் மரித்துப்போய் விட்டது. தனது சொந்த ஊழியர்களை கூட அதனால் பாதுகாக்க முடியவில்லை. இன்னும் என்ன நடக்க வேண்டுமென காத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இஸ்லாமிய உலகத்துக்கும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவான முடிவை எடுக்க ஏன் இந்தத் தாமதம்? இஸ்ரேல், காசாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது” என எர்டோகன் பேசியுள்ளார்.

காசா மீதான தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்தவேளையில் எகிப்து எல்லையோரம் உள்ள காசாவின் ஒரு பகுதியை இஸ்ரேல் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும், இந்த தாக்குதல் அடுத்த ஏழு மாதங்களுக்கு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இஸ்ரேல் பாதுகாப்பு படை, காசாவின் ரஃபா நகரின் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 82 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” புகைப்படமும் வேகமாகப் பரவியது. இஸ்டாகிராமில் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன. பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பாலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.