‘ஆல் ஐஸ் ஆன் ரஃபா’: இஸ்ரேலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்


காசா: ரஃபாவில் உள்ள தற்காலிக முகாம் மீது செவ்வாய்க்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தற்போது உலக நாடுகளின் ரஃபாவின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.

தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இந்தத் தாக்குதல் தொடர்பாக, ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதனிடையே, காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” என்ற ஹேஷ்டேக் உடன் பாலஸ்தீன மக்கள் குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதை பல நெட்டிசன்கள் ஷேர் செய்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்கள் வருண் தவான், அலி கோனி, சமந்தா ரூத் பிரபு மற்றும் திரிப்தி டிம்ரி உட்பட இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள், தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "ஆல் ஐஸ் ஆன் ரஃபா" என்பதை பகிர்ந்துள்ளனர். டிக்டாக் மற்றும் இன்ஸ்ராகிராமில் இந்த ஹேஷ்டேக் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரித்ததால், ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தை கூட்டியது.

கடந்த 2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,096 -க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 81,136 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது. பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

x