சாரல் மழையில் நனைந்தபடி குட்டிகளுடன் தண்ணீர் அருந்திய யானைக் கூட்டம்


கோவை: கோவையில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் சாரல் மழையில் நனைந்தபடி குட்டிகளுடன் யானை கூட்டம் தண்ணீர் அருந்தி சென்றன.

தமிழகத்தில் கோடை மழை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவையை ஒட்டியுள்ள மலை கிராமம் ஒன்றில் காட்டு யானைகள் சாரல் மழையில் நனைந்தபடியே தொட்டியில் தண்ணீர் அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு எனும் மலை கிராமத்தில் எல்லையில் விலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக வனத்துறை சார்பில் தொட்டி அமைக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (மே 21) காலை அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு குட்டிகளுடன் வந்த 6 காட்டு யானைகள் சாரல் மழையில் நனைந்தவாறு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.