சீறும் இரண்டு தலை பாம்பு: அமெரிக்க உயிரியல் பூங்கா காவலரின் வைரல் வீடியோ


இந்திய புராணங்களில் ஐந்து தலை நாகம் பற்றி நாம் படித்திருப்போம். கோயில் சிலைகள், இந்தியக் கடவுளரின் படங்களில் அவற்றைப் பார்த்திருப்போம், ஆனால், அப்படி ஒன்று நிஜத்தில் இருந்தால்? அப்படியொரு அரிய பாம்பு பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், ஐந்து தலையில்லை; இரண்டு தலை பாம்பு அது. அப்படியான அரிய இரண்டு தலை பாம்பை தனது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறார் அமெரிக்க உயிரியல் பூங்கா ஒன்றின் காப்பாளரான ஜே பிரேவர்.

ப்ரேவர் தனது பராமரிப்பில் உள்ள ஊர்வன பற்றிய கவர்ச்சிகரமான வீடியோக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார். இந்த வீடியோக்கள் அனைத்தும் அந்த உயிரினங்களின் முக்கியத்துவம் மற்றும் அவைப் பற்றிய தவறாக புரிதல்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. தனது சமீபத்திய வீடியோவில் ஜே ப்ரேவர் சமூக வலைதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு இரண்டு தலை பாம்பு ஒன்றை அறிமுகம் செய்துவைத்துள்ளார்.

ஆச்சரியமடையாதீர்கள்... நம்பமுடியாத அளவுக்கு இரண்டு தலை பாம்பு என்பது ஓர் அரிய வகையான உயிரினம்தான். அத்தகைய பாம்புகள் காடுகளில் உயிர் வாழ்வதற்தான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவுதான். என்றாலும் ப்ரேவர் பகிர்ந்திருக்கும் வீடியோவில் அத்தகைய அரிய வகை உயிரினம்தான் அவரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது, பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரண்டு தலை பாம்பு: ப்ரேவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு கோபமான பாம்பை என்னால் சமாளிக்க முடியும் என நான் நினைத்தேன். ஆனால், இப்போது நான் இரண்டு பேரைச் சமாளிக்க வேண்டும். இந்த பெண்களில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஆனால், அவர்கள் இருவரும் இப்போது என்னை கடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் இரண்டு தலைகளுடன் அந்தப் பாம்பு எவ்வாறு உயிர் வாழ்கிறது, அது எவ்வளவு நாள் உயிர் வாழும் என்ற ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. இரண்டு தலை பாம்பு பற்றிய இந்த வீடியோ ஆர்வத்தை தூண்டியிருப்பதோடு மட்டும் இல்லாமல், இதுபோன்ற அரிய வகை உயிரினங்களின் ஆயுள் மற்றும் உயிர்வாழ்தலின் சிரமங்கள் குறித்த விவாதத்தினையும் கிளப்பியுள்ளது.

பயனர் ஒருவர் கூறுகையில், "எனக்கு பல கேள்விகள் உள்ளது. இது இன்னும் உயிர் வாழும் நிலையில் உள்ளதா?” என்று கேட்டுள்ளார். இரண்டாமவர், "இது ஒரு பிறவிக் குறைபாடு. இது நீங்கள் நினைப்பதை விட அடிக்கடி நிகழும். ஆனால் துரதிருஷ்டவசமாக, ஒற்றைத் தலை பாம்புகளை போல இவை நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர் "இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இன்னுமொருவர் அவை எவ்வளவு நாள் உயிர்வாழும்?" என்று கேட்டுள்ளார். அடுத்த பயனர், "அந்தப் பாம்பு எவ்வாறு நகர்கிறது? ஒற்றை உடம்புடன் இரண்டு ஒற்றை உடம்புடன் அது ஊர்கிறது? பல கேள்விகள் என்னுள் எழுகிறது?" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "அவ்வ்வ்.. அதுவொரு சின்னக்கடி" என்று கூறியுள்ளார்.