சாலையில் ஓடும் மழைநீரில் சறுக்கி விளையாடும் ‘புனேவின் அலாவுதீன்’ - வைரல் வீடியோ


விரைவில் பருவமழை சூடுபிடிக்க உள்ளது. அதற்கு முன்பாகவே மும்பை, புனே போன்ற நகரங்கள் பருவமழைக்கு முந்தைய மழை பொழிந்து வெப்பத்தில் இருந்து மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. என்றாலும், பல இடங்களில் தண்ணீர் தேங்குவது, மின்சாரம் துண்டிப்பு போன்ற சிரமங்கள் வதைத்து வருகின்றன. இந் தநிலையில், மழையை ரசித்துக் கொண்டாடும் புனே இளைஞர் ஒருவரின் வீடியோ ஒன்று இணைத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மழைச்சூழலை கொண்டாடும் வகையில் சாலையில் ஓடும் மழைநீரில் அந்த இளைஞர் சறுக்கிச் செல்லுகிறார்.

உர்மி என்ற பயனர் தனது எக்ஸ் தளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். சில நொடிகளே உள்ள அந்த வீடியோவில், இளைஞர் சாலையில் தேங்கி ஓடும் மழைநீரில் மிதந்தபடியே வருகிறார். சாலையில் ஓடும் மழை நீரில் வாகனங்கள் செல்ல திணறும் நிலையில் மெத்தை போன்ற பொருளொன்றில் மழைநீரில் மிதந்தபடி வருகிறார் அவர். ஒய்யாரமாக படுத்தபடி வரும் அந்த இளைஞர், தனது விநோத மிதவை வாகனத்துக்கு வழி விடும்படி, எதிரே வரும் இருசக்கர வாகனத்துக்கு சைகை செய்கிறார். இதனைக் கண்டு பலர் ஆச்சரியம் அடைந்தனர். இந்த வீடியோவுடன், "புனே மக்களுக்கு குளிரவில்லையா? நஹ். அவர்களுக்கு அனைத்து சுகமும் கிடைத்தது" என்று உர்மி பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதினைந்து விநாடி வீடியோ ஜூன் 7-ம் தேதி பதிவெற்றப்பட்டுள்ளது. அப்போது முதல் இதனை 47 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 500 இணைவாசிகள் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். பலர் கருத்திட்டுள்ளனர்.

பயனர் ஒருவர், "மழையில் புனே சுற்றுசூழலின் நண்பனாக மாறுகிறது" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், "இந்த இளைஞனுக்கு நாளைக்கு ஏதோ அஸைன்மென்ட் முடிக்க வேண்டியுள்ளது என நான் பந்தயம் கட்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர், "புனேவின் அலாவுதீன் அவரது மந்திரக் கம்பளத்தில்" என்று பதிவிட்டுள்ளார். அடுத்து ஒரு பயனர், "கனமழை காலத்தில், மும்பையின் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல சிறந்த வழி. போக வேண்டிய இடத்துக்கு வேகமாகவும், குறைந்த அளவு மாசுடனும் செல்லலாம்" என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர் "புனேகாரனாக பெருமை கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இன்னுமொரு பயனர், "புனேவாசிகள் மழையை வேறு வகையில் உணருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். "என்னவொரு முட்டாள்தனம், போக்குவரத்து காவலர்கள் எங்கே?" என்று பயனரொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.