வெயில், பாரம், எதிர்பாராத உதவி: இ(த)ணையத்தை வென்ற இளம்பெண்ணின் செயல்!


இதயத்தை வருடும் செயல்கள் முதல் உத்வேகம் தரும் சம்பவங்கள் வரை பல்வேறு வினோத உள்ளடக்கங்களைத் தன்னுள் வைத்துள்ள சமூக ஊடகங்கள் அதிசயம் நிறைந்த ஒன்றே. வெறுமையான மனதுடன் அதனுள் உலவிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவரின் செயல் அன்றைய நாளை அர்த்தமுள்ளதாக்கித் தரும் ஆச்சரியத்தை அளித்திட தவறுவதில்லை. அப்படி, வாட்டி வதைக்கும் வெப்ப அலையில் தவிக்கும் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவருக்கு உதவும் இளம்பெண்ணின் செயல் சமூக வலைதளத்தில் இப்போது வைரலாகி இணைவாசிகளின் இதயங்களை உருகச் செய்கிறது.

பயனர் ஒருவரின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர், பெரிய ஏர்கூலர் பாரத்தை ஏற்றிக் கொண்டு பாலம் ஒன்றில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு உதவுவதற்காக ஒரு பெண் ஒருவர் விரைந்து வருகிறார். வாட்டும் வெயிலில் சிரமத்துடன் பாலம் ஏறும் ரிக்‌ஷா ஓட்டுநருக்கு அந்த நேரத்தில் தேவையான உதவியைச் செய்யத் தொடங்குகிறார். அந்த சைக்கிள் ரிக்‌ஷாவை பின்னால் இருந்து தள்ளத் தொடங்குகிறார். அதன் மூலம், அந்த தொழிலாளியின் சிரமத்தை சிறிது குறைக்கிறார்.

தொடக்கத்தில் உதவி செய்வதில் இருந்த பெண்ணின் உறுதியை வாட்டும் வெயில் மெல்ல குறைக்கிறது. தொடர்ந்து வண்டியைத் தள்ளுவதில் அவர் சோர்வடைய இந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டிருக்கும் தனது நண்பரின் உதவியை நாடுகிறார். அவர்கள் இணைந்து அந்த ரிக்‌ஷாவைத் தள்ளி பாலத்தின் உச்சிக்குச் கொண்டு வருகின்றனர்.

பாலத்தின் உச்சியை அடைந்ததும் சைக்கிள் ரிக்‌ஷாவைச் நிறுத்தச் சொல்லி அந்த தொழிலாளியிடம் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளிக்கு மதியம் உணவு, தண்ணீர் பாட்டில், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ஒரு துண்டும் கொடுக்கிறார்.

வெயிலில் வாடிய தொழிலாளிக்கு தனது உடல் உழைப்பைக் கொடுத்து உதவியதுடன், அவர் புத்துணர்ச்சி பெறுவதற்கான தருணத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த பெண்ணின் பெருந்தன்மை இணையவாசிகளை நெகிழச்செய்து வருகிறது. எக்ஸ் தளத்தில் இந்த வீடியோ 5 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இணையவாசிகள் பலர் அந்தப் பெண்ணின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

பயனர் ஒருவர், "வீடியோவுக்காக இந்த மாதிரி செயல்கள் செய்யப்பட்டாலும் இவற்றைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இதன் மூலம் யாரோ ஒருவர் உதவியைப் பெறுகிறார்கள். மேலும், இதுபோன்ற வீடியோக்களை உருவாக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், "ரீல்ஸுக்காக மக்கள் இன்று எதைவேண்டுமானலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். இதில் உள்ள நல்ல விஷயம் இத்தகைய ரீல்ஸ்கள் மூலம் சிலர் உதவி பெறுகிறார்கள் என்பதே. வாழ்த்துகள் மற்றும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.