3டி-யில் தத்ரூப ‘விபத்து’ காட்சி வைரல்: மரண பயத்தை கண்முன் காட்டி விழிப்புணர்வு


யதார்த்தமா, கற்பனையா எனப் பிரித்துப் பார்க்க முடியாத முப்பரிமாண உலகினை உருவாக்கி காண்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடியானவர் மஜித் மவுசாவி. பல்வேறு சூழல்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட இவரது வீடியோக்கள் சமூக வலைதள பக்கத்தில் மிகவும் பிரபலம். அவரின் சமீபத்திய முப்பரிமாண வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. விழிப்புணர்வை ஏற்பற்படுத்தும் வகையிலான அந்த வீடியோ பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் அவசியத்தையும், வேகமாக செல்வதன் ஆபத்தையும் வலியுறுத்துகிறது.

கவனக் குறைவாக வாகனம் ஓட்டுவதன் பின்விளைவுகளை எடுத்துக்கூறும் அந்த வீடியோவில், இருசக்கர வாகன ஓட்டி ஆளிலில்லாத சாலை ஒன்றில் வேகமாக தனது வண்டியை ஓட்டிச் செல்கிறார். அப்போது அவரது வாகனத்தை மற்றொரு இருசக்கர வாகனம் முந்திச் செல்ல அதனை வேகமாக பின்தொடர்ந்து முந்திச் செல்ல முயற்சிக்கையில் எதிரே ஒரு ட்ரக் சென்று கொண்டிருக்கிறது.

அதனை முந்துவதற்காக எதிர்பக்கம் நகர்ந்து முன்னேற முயல்கையில் அங்கே வீடியோ சட்டென நின்று பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சற்றும் எதிர்பாராத வகையில் எதிரே வேகமாக வருகிறது மற்றொரு ட்ரக். ஒரு நிமிடம் பார்ப்பவர்களின் இதயம் நின்று துடிக்க, அந்த நிமிடநேர இடைவெளியில் என்ன நடந்திருக்கும் எனக் காட்டி பிரம்பிப்பையும் பயத்தையும் ஒருசேர காட்டியிருக்கிறார் மஜித் மவுசாவி.

வேகமாக வந்த பைக் எதிரே வந்த ட்ரக்கில் மோதுவதற்கு முன்பாக அப்படியே நிற்கும் காட்சி கற்பனையான உலகத்துக்குள் நுழைகிறது. இரண்டு வாகனங்களும் மோதிக் கொள்வதற்கு முன்பாக கேமிரா கோணம் சாலையின் பக்கவாட்டில் திரும்ப அங்கே ஒரு மான் நின்று நடப்பதை வேடிக்கை பார்க்கிறது. அத்துடன் ஒரு புகைபோன்ற உருவம் தன் அங்கங்களை சோதித்துப் பார்க்கிறது. கேமரா மறுபடியும் பக்கவாட்டில் திரும்ப இப்போது அங்கே கருப்பு உருவத்தில் ஒரு எம தூதன் நிற்கிறது.

அடுத்தக் காட்சி இமைக்கும் நேரத்துக்குள் லாரி, பேக் மீது மோதி அதனை சில அடி தூரம் இழுத்துச் செல்ல வண்டியோட்டி சாலையில் உருண்டு உயிர்விட, இப்போது திரை முழுவதும் பயம் காட்டி சிரிக்கிறது சாலையில் நின்ற எமதூதனின் உருவம்.

இந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. அது பகிரப்பட்டதில் இருந்து இதுவரை அந்த வீடியோ 156 மில்லயன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தேபோல், இந்த வீடியோ காட்சிக்கு 11 மில்லியன் பேர் விரும்பம் தெரிவித்துள்ளனர். அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வீடியோ குறித்து பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

பயனர் ஒருவர், "அய்யோ கடவுளே. நான் மிகவும் பயந்துவிட்டேன். பைக்கை நான் ஓட்டுவது போல உணர்ந்தேன். கொஞ்சம் நெஞ்சு வலியும் வந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார். இரண்டாமவர், "என் உயிர் உடலை விட்டு வெளியேறி விட்டது. மிகவும் அருமையான எடிட்டிங்" என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவது பயனர், "இதனால் தான் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். சாலை ஆளில்லாமல் இருக்கிறது என்பதற்காக நீங்கள் பொறுப்பற்றவராக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என்று கூறியுள்ளார்.

நான்காவது நபர், "இது விளையாட்டு வீடியோ என்று சொல்பவர்களுக்கு இது நிஜ வாழ்க்கையிலும் நடக்கலாம். கவனமாக இருப்பது நல்லது" என்று கூறியுள்ளார். ஐந்தாவது நபர், "இது எனக்கு மாரடைப்பை ஏற்படுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.