உலக பட்டினி தினம் | ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்


உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை, அம்பத்தூர் பழைய இஎஸ்ஐ சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜி.பாலமுருகன் உணவு வழங்கினார்.

சென்னை: உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு நேற்று உணவு வழங்கப்பட்டது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

இதற்கிடையே, ‘இல்லாதோருக்கு உணவு வழங்குவோம்’ என்றகருத்துடன் மே 28-ம் தேதி உலகபட்டினி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் விஜய்மக்கள் இயக்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதேபோல் இந்தஆண்டும் உணவு வழங்கப்பட்டது.

இதற்காக தென்சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தொடங்கி வைத்து, சமபந்தி விருந்தில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்டம், தென்சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள் உட்பட மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உணவு வழங்கினர். தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. அதேநேரம், தமிழகத்தில் 23 இடங்களில் தளபதி விலையில்லா விருந்தகம் வாயிலாக எந்நாளும் காலைவேளையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. திருமண மண்டபத்தில் உணவு வீணாவதைத் தடுக்கும் வகையில் அங்கு சமைக்கப்படும் உணவை முதியோர் இல்லங்களுக்கு கொண்டு செல்லும் பணியையும் கட்சி நிர்வாகிகள்மேற்கொள்வர். ஜூன் 22-ம் தேதிகட்சித் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளோம்.