கழிவுநீர் கலப்பதை தடுக்க சிங்காநல்லூர் குளத்தில் சுத்திகரிப்பு நிலையம்: கட்டுமானப் பணி தீவிரம்


கோவை சிங்காநல்லூர் குளத்தில், கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.  படம்: ஜெ.மனோகரன். 

கோவை: கழிவுநீர் கலப்பதை தடுக்க, சிங்காநல்லூர் குளத்தில் 2 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி தீவிரமடைந்துள்ளது.

கோவை - திருச்சி சாலையை மையப்படுத்தி 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிங்காநல்லூர் குளம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. நொய்யல் ஆறு, சங்கனூர் பள்ளம் உள்ளிட்டவற்றில் இருந்து வரும் கழிவுநீர் நான்கு வாய்க்கால்கள் மூலமாக சிங்காநல்லூர் குளத்தில் வந்து கலக்கின்றன. இக்குளத்தில் நிரம்பும் நீர் மறுபுறம் உள்ள, வாய்க்கால் வழியாக சூலூர் குளத்துக்குச் சென்றடைகிறது.

சிங்காநல்லூர் குளத்துக்கு வாய்க்கால்கள் மூலம் பிற ஆற்றுப் பகுதிகளில் இருந்து நீர் வருவது மட்டுமல்லாமல், சுற்றுப் புற பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்தும் கழிவுநீர் வந்து கலக்கிறது. இதனால் குளத்து நீர் மாசடைவது மட்டுமல்லாமல், குளத்தில் ஆகாயத்தாமரைகள் பரவுகின்றன. பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்காநல்லூர் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், ஆகாயத்தாமரை பரவலை தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட எந்த திட்டமும் பலன் கொடுக்கவில்லை.

சிங்காநல்லூர் குளத்தில் கழிவுநீர், பிளாஸ்டிக் கலப்பதை தடுக்கவும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஆகாயத் தாமரை பரவலைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது,”சிங்காநல்லூர் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, திருச்சி சாலையை மையப் படுத்தியுள்ள கரையில், ரூ.4.50 கோடி மதிப்பில் 2 எம்.எல்.டி திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கரைகளை பலப் படுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. இயந்திரங்கள் பொருத்தும் பணி நிலுவையில் உள்ளது. ஜூன் மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடித்து சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றனர்.

x