வைகோவுக்கு அடுத்த 2 நாட்களில் அறுவை சிகிச்சை


சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவுக்கு 2 நாளில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகள் திருமண விழா திருநெல்வேலியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலிசென்றார்.

அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோவின் வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கு முதல்கட்ட சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 நாளில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வைகோ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: வைகோ விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியை தொடர வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வைகோவுக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று, விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: வைகோ விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளை தொடர்ந்திட விழைகிறேன்.

x