சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் 1,433 பணியாளர்களுக்கு நாளை பயிற்சி வகுப்பு


மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் இப்பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, வி.ஜெயசந்திர பானு ரெட்டி, ஜி.எஸ்.சமீரன், ஷரண்யா அறி உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பார்வையாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களை கணினி குலுக்கல் முறையில் முதல்கட்டமாக தேர்வு செய்யும் பணி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் வாக்கு எண்ணும்பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களை கணினி குலுக்கல் முறையில்தேர்வு செய்யும் பணி முதல்கட்டமாக நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 3 மக்களவை தொகுதிக்கும் சேர்த்து நுண் பார்வையாளர்கள் 357 பேர், மேற்பார்வையாளர்கள் 374 பேர், உதவியாளர்கள் 380 பேர், அலுவலக உதவியாளர் 322 பேர் என மொத்தம் 1433 பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதில் அலுவலக உதவியாளர்களைத் தவிர்த்து 1,111 பேர் தற்போது தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கான பயிற்சி வகுப்பு நாளை (மே 29) தேர்தல் நடத்து அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக 2-ம் கட்டமாக கணினி குலுக்கல்முறையில் தேர்வு செய்யும் பணி ஜூன் 3-ம் தேதி காலை 8 மணி அளவில் நடைபெறும்.

அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மேசை வாரியாக பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி ஜூன் 4-ம் தேதி காலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஏற்கெனவே வாக்குஎண்ணும் மையங்களில் 1,384 பணியாளர்கள் 3 அடுக்கு பாதுகாப்பு முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல வாக்கு எண்ணும் மையங்களான ராணிமேரிஸ் கல்லூரியில் 176, அண்ணாபல்கலைக்கழகத்தில் 210, லயோலாகல்லூரியில் 198 என மொத்தம்584 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர 106 கேமராக்கள் வட சென்னையிலும், 132 கேமராக்கள் தென் சென்னையிலும், 107 கேமராக்கள் மத்திய சென்னையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக மேசை வாரியாக கூடுதலாகப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூடுதலாக வாக்கு எண்ணும் மையங்களில் 3 பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகள் தங்களது பூத் ஏஜென்ட்கள் யார்? எந்த பூத்துகளுக்கு வர உள்ளார்கள் என்பதை ஜூன் 1-ம் தேதிக்குள் தெரிவித்தால், அவர்களுக்கான அடையாள அட்டை விரைந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

x