3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்; வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள்: அண்ணாமலை உறுதி


சென்னை: வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள் என்றும், 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் குழு, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மக்களவை தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கே.பி.ராமலிங்கம், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உட்படமாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிறகான கள நிலவரம், சூழ்நிலை, தேர்தல் பணி, வாக்கு எண்ணிக்கைக்கான பாஜகவின் தயார் நிலை, வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டு அவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துணை பிரதமர் ஆகும் கனவில் இருக்கிறார். அதேநேரத்தில் இண்டியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் திமுகவினர் ஒரு மாய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2019-ஐ விட இந்த முறை தென் மாநிலங்களில் இருந்து அதிகளவில் பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வார்கள். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு தென் மாநிலம் காங்கிரஸ் கோட்டை, பாஜக தென் மாநிலங்களில் வெற்றி பெறாது என்று யாரும் பேச முடியாது. நாடு முழுவதும் தாமரையைபோல பாஜக பரந்து விரிந்திருக்கும்.

பாஜக நிர்வாகிகள் பாஜகவின் வெற்றியை கொண்டாடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். பாஜக 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். தமிழகத்தில் நாட்டை எதிர்க்கக்கூடிய ஆதிக்க சக்திகள் அதிகரித்துவிட்டன. மோடி என்ற ஒற்றை மனிதனை எதிர்க்க வேண்டும், அவரை தவறான வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்பதற்காகதான் இண்டியா கூட்டணி என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: இந்த 6 கட்ட தேர்தலை பார்க்கும்போது, இதுவரை 335 இடங்களில் பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் கணித்திருக்கிறோம். தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு செல்ல இருக்கிறார்கள். தமிழகத்தை பொருத்தவரை பாஜகவின் வெற்றி இரட்டை இலக்கத்தில் இருக்கும். 2019-ம் ஆண்டு தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் டெபாசிட் இழந்தார். இதுதான் அவரது அரசியல் அனுபவம்.

பிரதமரின் பேச்சை இண்டியா கூட்டணி கட்சியினர் திரித்து பேசி வருகிறார்கள். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மட்டுமே பாஜக எதிர்க்கிறது. நான் மாட்டை சாமியாக பார்ப்பவன். அதற்காக, மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை நான் எதிர்க்க மாட்டேன். அது அவர்களது உரிமை. ஆனால், என்னை மாட்டுக்கறி சமைத்து வை என யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவாவாதி. சட்டப்பிரிவு 370 ரத்து, ராமர் கோயில், பொது சிவில் சட்டம், ராம சேது உள்ளிட்ட பலவற்றுக்கு ஆதரவாக இருந்தவர். சென்னையில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டபோது, அரசு செலவில், அதனை கட்டி தருவதாக ஜெயலலிதா கூறினார்.

அந்தவகையில், ஜெயலலிதாவை நான் இந்துத்துவாவாதி என சொன்னதில் தவறில்லை. அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், விவாதத்துக்கு பாஜக தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

x