அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் 600 காளைகள் பங்கேற்பு: 20 பேர் காயம்


அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிபாய்ந்த காளையை அடக்க முயன்ற வீரர்கள்.

இளையான்குடி: அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் பங்கேற்றன. போட்டியில் மாடு முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யாம்பட்டியில் கலுங்கு முனீஸ்வரர் கோயில் புரவி எடுப்பு விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன.

மூன்று சுற்றுகளாக 150 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, கட்டில், பீரோ, சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.

மேலும் மாடுகள் முட்டியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலைக்கிராமம், இளையான்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கண்டுகளித்தனர்.

x