விருதுநகர் ஆட்சியர் உடனான பேச்சு தோல்வி: காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என ‘டாப்மா’ அறிவிப்பு


விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் வருவாய்த் துறையினர் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின் போது, சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அந்த ஆலையை சீல் வைப்பது, உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகள் நடுநிலையாக நடத்தப்படவில்லை எனக்கூறி தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை முறைப்படுத்த வேண்டும் எனக்கோரி டாப்மா சங்க நிர்வாகிகள், சாத்தூர் எம்எல்ஏ-வான ரகுராமன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள சோல்சா வெடிகளை பட்டாசு ஆலைகளில் தயாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், பட்டாசு ஆலைகளில் ஆய்வின் மூலம் விதிமுறை மீறல்களை சரிசெய்து ஆலைகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து, எம்எல்ஏ ரகுராமன் அளித்த பேட்டியில், “ஆய்வுகள் அதிகமாக நடத்தி ஆலைகளின் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப் படுகின்றன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், ஊழியர்களின் எண்ணிக்கையும், அதிக வெடி மருந்துகளை கையாளுவதையும் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். பட்டாசு ஆலைகளை உள் குத்தகைக்கு விடக்கூடாது என்று கூறினார். இதை ஆலை உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பட்டாசு ஆலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும். பணியாளர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்று கூறினார்.

டாப்மா சங்கச் செயலாளர் மணிகண்டன் அளித்த பேட்டியில், ”ஒரு தலைபட்சமாக ஆய்வு நடக்கிறது என்றும், பேரியம் நைட்ரேட் பயன்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் சரவடிகளை தடுப்பதில் ஆர்வம் காட்டப்படுகிறது என சுட்டிக்காட்டினோம். சோல்சா வெடி தயாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், சோல்சா வெடி தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறினோம்.
எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவி்த்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை பார்த்துவிட்டு கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்வெடி தயாரிக்கக் கூடாது என்பதில் எந்தெந்த ரகம் தயாரிக்கலாம் அல்லது தயாரிக்கக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். விதிமுறைகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். ஆய்வுகள் முறையாகவும் நடுநிலையாகவும் நடைபெற வேண்டும். அவ்வாறு நடைபெற்றால் எங்கள் போராட்டத்தை வாபல் பெறுவோம். ஆனால், மாவட்ட ஆட்சியரின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்காததால் போராட்டம் தொடரும்” என்றார்.