ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் கிடையாது: உயர் நீதிமன்றம்


மதுரை: ஒருவரி்ன் கல்விச் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் கிடையாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை கூறியுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த பி.ரஞ்சன் ஜேம்ஸ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”நான் அரசு மருத்துவக் கல்லூரியில் பல் நோக்கு மருத்துவ பிரிவில் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் மறு சீரமைப்பு சிகிச்சை முறையில் முதுகலை படிப்பு முடித்துள்ளேன். முன்னதாக அரசு ஒப்பந்தப்படி முதுகலை மருத்துவ படிப்பு முடிந்ததும் 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தேன். அதன்படி கரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளேன். பின்னர், பிளாஸ்டிக் சர்ஜி மற்றும் மறுசீரமைப்பு பிரிவில் பணி காலியிடம் இல்லாததால் என்னை பணியில் அமர்த்தவில்லை.

தற்போது எந்தப் பணியும் இல்லாமல் உள்ளேன். இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனது மருத்துவப் படிப்பு தொடர்பான அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் வழங்க உத்தரவிட வேண்டும்’எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், முதுகலை மருத்துவம் முடிந்த மாணவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியாவிட்டால் அவரிடம் இழப்பீடு தொகை வசூல் செய்யலாம் என்ற விதி உள்ளது எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதி, “அரசு தரப்பில் பணி வழங்கி மனுதாரர் அதை ஏற்க மறுக்கும் சூழலில் இழப்பீட்டு தொகையை வசூலிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், மனுதாரருக்கு அரசு தரப்பில் பணி வழங்கப்படவில்லை. மனுதாரர் பணிபுரிய தயாராக உள்ளார்.

மேலும், இந்திய ஒப்பந்தச் சட்டப்படி கல்விச் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தக் கூடிய விற்பனை பொருள் அல்ல. ஒருவரின் சான்றிதழ்கள் மீது பிறருக்கு எந்த உரிமையும் கிடையாது. எனவே, மனுதாரரின் மருத்துவக் கல்லூரி சான்றிதழ்களை 3 வாரத்தில் அவரிடம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.