மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற கோரி பாமக நூதன போராட்டம்


கோவை: மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் சட்டவிரதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்டியிட்டு கையில் பதாகைகள் ஏந்தியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கோரிக்கை மனு அளித்த பின் பாமக மாவட்ட செயலாளர் ராஜகோபால் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களான சின்ன தடாகம், பிளிச்சி, கணுவாய் ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. கனிமவளம் கொள்ளையைத் தடுக்கவும் செங்கல் சூளைகளை அகற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காப்புக்காடுகளில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கல்குவாரிகள், சட்டப் பூர்வ கனிம வளம், சுரங்கங்கள் இருக்க வேண்டும் என்றும் நீர் வழித் தடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தான் கனிம வளம் சார்ந்து இருக்க வேண்டும் எனவும் வழிகாட்டு நெறிமுறை விதித்திருந்தது. அவற்றை மீறி கட்டாஞ்சி மலை கிராமத்தில் ஒரு மலை கனிமவளத்துக்காக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கருக்கு மேல் 40 அடி பள்ளத்தில் ஆழம் தோண்டி கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் நொய்யல் ஆறு, கௌசிகா ஆறு மற்றும் சங்கனூர் ஓடை உள்ளிட்டவை வறண்டு போகும்.

10 லட்சம் மக்களும் 30 ஆயிரம் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். யானை - மனித மோதல் சம்பவங்களுக்கு சட்டவிரோதமாக செயல்படும் செங்கள் சூளைகள் முக்கிய காரணமாகும்.

எனவே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கிராமங்களான தொண்டாமுத்தூர், வடிவேளம்பாளையம், முகாசி மங்கலம், வண்டிக்காரன்புதூர் ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் சட்டவிரதமாக செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்டியிட்டு கையில் பதாகைகள் ஏந்தியபடி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.