சேலம் அருகே விடுதி உணவு சாப்பிட்ட நர்சிங் மாணவிகளுக்கு உடல்நிலை பாதிப்பு: உணவுப் பாதுகாப்புத் துறை விசாரணை


சேலம்: சேலம் அருகே விடுதியில் மதிய உணவு அருந்திய நர்சிங் கல்லூரி மாணவிகள் 50 பேர், வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50 பேருக்கு, வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் நேற்றிரவு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சந்தித்து, அவர்களின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தி, சிகிச்சை அளித்திட மருத்துவர்களிடம் ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தினார். இதனிடையே, தனியார் நர்சிங் கல்லூரியில், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் கூறுகையில், “தனியார் நர்சிங் கல்லூரி நிர்வாகம் நடத்தி வரும் விடுதிக்கு உணவுப் பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெறவில்லை. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. அங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சாக்கடை நீருடன் கலக்கப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டது. இக்குறைபாடுகளை சுட்டிக்காட்டி கல்லூரி வளாகத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

விடுதியில் உள்ள சமையல் கூடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத் துறையால் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர், உணவுப் பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற்று மீண்டும் விடுதியை உயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுதியில் இருந்து, குடிநீர் உள்பட, ஏழு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவு மாதிரிகளின் ஆய்வறிக்கை பெறப்பட்ட பின்னர் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

சேலம் அருகே தனியார் நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்டு, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சந்தித்து, உடல் நலன் விசாரித்தார்.