நகரமயமாக்கலில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழகம்: தமிழக அரசு பெருமிதம்


சென்னை: புதுமையான திட்டங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 1991-ல் 25.71 சதவீதம் என இருந்தது. 2011-ல் 31.16 ஆக உயர்ந்தது. அதே நேரம், தமிழகத்தில் நகர்ப்புற மக்கள் தொகை 2011 -ம் ஆண்டில் 48.45 சதவீதம் என உயர்ந்து. தேசிய சராசரியை விட 17.29 சதவீதம் அதிகரித்து, நகரமயமாதலில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக, ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சியாகவும் வளர்ச்சி பெறுகின்றன.

தமிழகத்தில் தற்போது, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. மேலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற மக்களின் வசதிகளை பெருக்க பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

நகராட்சி, பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.1000 கோடியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 4,860 பேருக்கு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சீர்மிகு நகரம் திட்டம், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் ஈரோடு ஆகிய 11 மாநகராட்சிகளில் ரூ.10,890 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது.

சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை தவிர்த்த 20 மாநகராட்சிகள்,138 நகராட்சிகளில் 11,872 கி.மீ. நீளமுள்ள சேதமடைந்த சாலைகள் 4 ஆண்டுகளில் சீரமைக்க உத்தரவிடப்பட்டு 9,346 கி.மீ. சாலைகள் நடப்புத் திட்டங்களின் கீழும், மீதமுள்ள 2,526 கிமீ நீளமுள்ள சாலைகள் அரசின் சிறப்பு நிதி ரூ.1,000 கோடியில் பணிகளை முடிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் பருவமழையின்போது வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற நிலை வருங்காலங்களில் ஏற்படாத வகையில், வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 4 தொகுதிகளாக ரூ.491.29 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.

முக்கிய திட்டங்கள்: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.8,672 கோடியில் 13,387 கி.மீ. நீள சாலை, கொசஸ்தலை ஆறு மற்றும் சென்னையைச் சுற்றி ரூ.6,778 கோடியில் 2,641 கிமீ நீள மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 8,911 கோடியில் 28 பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், ரூ.858 கோடியில் 7.42 லட்சம் தெரு விளக்குகள் எல்ஈடி விளக்குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ரூ.1500 கோடியில் 55 பேருந்து நிலையப் பணிகள் முடிவுற்ற நிலையில், 100 பேருந்து நிலையப் பணிகள் நடைபெறுகின்றன. ரூ.690 கோடியில் 62 சந்தைகள் கட்டி முடிக்கப்பட்டு, 86 இடங்களில் சந்தை பணிகள் நடைபெறுகின்றன.

100 அறிவுசார் மையங்கள் நகராட்சி, மாநகராட்சியால் தொடக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.198 கோடியில் 79 அறிவுசார் மைய கட்டிடங்கள், ரூ.424 கோடியில் 681 பூங்கா அபிவிருத்திப் பணிகள் முடிந்துள்ளன. ரூ.700 கோடியில் பல்வேறு நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ.373 கோடியில் புதிய மின் மயானங்கள் அமைக்கும்பணிகள், நவீனப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

இதேபோல் ரூ.153 கோடியில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அலுவலகக் கட்டிடங்கள், ரூ.771 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.316 கோடியில் பயோமைனிங் மூலம் தேக்கத் திடவுக்களை அகற்றி, நிலத்தினை மீட்டெடுக்கும் பணி பல்வேறு நகரங்களில் முடிவுறும் நிலையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் 1,405 பேருக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலன் உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக்குறையை போக்க, 2,500 பேரைத் தேர்வு செய்ய தேர்வுத்தாள் மதிப்பிடும் பணி நடைபெறுகிறது. இதுதவிர மேலும் 3,000 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் புதுமையான திட்டங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் பணிகளால் நகரமயமாக்கலில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது