‘நாட்டில் 1.58 கோடி சிறுவர்கள் போதைக்கு அடிமை’ - ஐகோர்ட் மதுரைக் கிளை வேதனை


மதுரை: நாட்டில் 10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 1.85 கோடி இளம் சிறார்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.

மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை - திருச்சி 4 வழிச்சாலை சிட்டம்பட்டி அருகே சென்னை செல்லும் காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்தக் காரில் கடத்தப்பட்ட 85 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, கணேசன் என்பவர் உட்பட பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் கணேசனுக்கு 3 பிரிவுகளில் தலா 10 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக் கோரி கணேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: ''மருந்துகள் நோயை குணப்படுத்தவும், வலியை குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதால், போதைப் பழக்கம் தற்போது சமூக பழக்கமாகி மாறியுள்ளது. போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985-ல் நிறைவேற்றப்பட்டது. அதில் 1989-ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

நாட்டில் 10 முதல் 17 வயதுடைய 1 கோடியே 58 லட்சம் இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. போதையால் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும், தற்கொலைகளிலும் ஈடுபடுகின்றனர். போதை பழக்கத்துக்கு ஆளானவர்களில் 2016-ம் ஆண்டில் 5,199 பேரும், 2017-ல் 6,105 பேரும், 2018-ல் 7,193 பேரும், 2019-ல் 7,860 பேரும், 2021-ல் 10,560 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

போதைக்கு அடிமையானவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது. போதை மற்றும் மதுப்பழக்கத்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மரணம் நிகழ்கிறது. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும், போதைப்பொருளால் இளைஞர்கள், அப்பாவிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

எனவே, பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்போது, அவற்றை நீதிமன்றம் பெற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் அவை விற்பனைக்கு செல்லாதபடி அழித்துவிட வேண்டும். மேலும், போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அரசு தரப்பினர் பறிமுதல் செய்த போதைப் பொருளை அழிப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனை முறையாக பின்பற்ற வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவிட்டார்.