ஜூலை 23 முதல் ஜி.டி. விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து மீண்டும் இயக்கம்


சென்னை: சென்னை - டெல்லி இடையிலான ஜி.டி. விரைவு ரயில் வரும் 23-ம் தேதி முதல் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணி நடக்க உள்ளது.

இதன் காரணமாக, சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் (ஜி.டி) எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த மே மாதம் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மாற்றம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணி நடந்து வருவதால், ஜி.டி. விரைவு ரயில் ஜூலை 23-ம் தேதி முதல் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் வெளியிட உள்ளது. எனினும், இந்த மாற்றம் தற்காலிகமானதுதான். தாம்பரத்தில் இருந்துதான் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.