ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்!


மத்திய, மாநில அரசுகள் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்யக்கோரி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடந்த மூன்று வாரமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், மீனவர்கள் பிடித்து வரும் ஏற்றுமதி தரமிக்க இறால், கனவாய், நண்டு உள்ளிட்ட மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் மீன்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் குறித்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறியதாவது, "கிலோ ரூ. 600-க்கு வாங்கப்பட்ட இறால் மீனை தடைக்காலத்திற்கு பிறகு ரூ. 400-க்கும், ரூ. 350-க்கு வாங்கப்பட்ட கணவாய் மீனை தடைகாலத்துக்குப் பின் ரூ.250-க்கும், ரூ.500-க்கு வாங்கிய நண்டை ரூ.250-க்கும், மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

தடைக்காலத்தில் ஒரு விசைப் படகுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவழித்து பராமரிப்புப் பணியைச் செய்தோம். தற்போது மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒவ்வொரு முறையும் கடலுக்குச் சென்று திரும்பும்போதும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்றனர்.