அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை முயற்சி வழக்கில் 3 பேர் பணியிடமாற்றம்


திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் உட்பட 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் தன் தாயுடன் பல ஆண்டுகளாக வசிக்கும் குடிசை வீடு இருக்கும் இடம் அரசுக்கு சொந்தமான வண்டிப்பாதை வகையை சேர்ந்தது என, வருவாய் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து ராஜ்குமாரின் குடிசை வீட்டை அகற்ற வருவாய்த் துறையினர் முடிவு செய்தனர். இதற்கான முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகும், அவ்விடத்தைவிட்டு ராஜ்குமார் வெளியேறவில்லை.

இந்நிலையில், நேற்று முன் தினம் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருடன் ராஜ்குமார் வீட்டை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். வீட்டை அகற்ற ராஜ்குமார் கால அவகாசம் கேட்டபோது, அதற்கு வருவாய்த் துறையினர் மறுப்பு தெரிவித்தனர். உடனே ராஜ்குமார் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டார்.

இச்சம்பவத்தில், உடலில் 50 சதவீத தீக்காயம் அடைந்த ராஜ்குமார், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் பாக்யஷர்மா ஆகிய 3 பேரை பணியிடமாற்றம் செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வட்டாட்சியர் பிரீத்தி உள்ளிட்ட 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.