சமூகநீதிக்கு திமுக துரோகம்: அன்புமணி விமர்சனம்


சென்னை: பாமக தலைவர் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார், என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்?

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பிசி,எம்பிசிவகுப்பினருக்கான இடங்களைபட்டியலினத்தவருக்கு ஒதுக்கலாம், ஆனால், பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்குமான இடங்களை அவர்களில் யாரும் இல்லாத சூழலிலும் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்று ஆணையிட்டிருப்பது எந்த அரசு?

2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகுஅதை நிறைவேற்றாமல் ஏமாற்றுவது யார், பட்டியலின மக்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 22 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது எந்த அரசு?

கள்ளச்சாராயத்தால் பெரும்பாலான பட்டியலினத்தவர் உயிரிழந்த நிலையிலும், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட முடியாது என்று கூறி குற்றவாளிகளை பாதுகாப்பது எந்தக் கட்சி அரசு? என்பனஉள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும் விடை திமுக, மு.க.ஸ்டாலின் என்பது தான். எனவே, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் சிந்தித்து, இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்