ஏடிஎம் மையத்தில் இருந்து தீடிரென வெளிவந்த கரும்புகை: வாலாஜாபாத்தில் பரபரப்பு


புகை வந்த ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்யும் தீயணைப்பு வீரர்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வாலாஜா பாத் பகுதியில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் இன்று திடீரென கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ராஜா வீதியில் ஐஓபி வங்கி கிளை இயங்கி வருகிறது. அதையொட்டி ஏடிஎம் மையமும் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தின் உள் பகுதியில் வங்கிக்கு செல்லும் மின் இணைப்புக்கான மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று காலையில் வங்கி திறக்கப்படும் நேரத்தில் திடீரென்று ஏடிஎம் மையத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. பணம் இருக்கும் ஏடிஎம் மையத்துக்குள் விஷமிகள் யாரேனும் தீ வைத்துவிட்டனரோ என்ற அச்சத்தில் பலரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

அப்போது வங்கி ஊழியர் ஒருவர் ஓடி வந்து தீயணைக்கும் கருவியைக் கொண்டு மையத்தின் உள் பகுதியில் புகையை அடித்தார். இதனால் அந்த இடத்தில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகை வந்தது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையால் அந்தப் பகுதியில் மின் சாரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.