பல்லாவரம் | போலீஸ் என்று சொல்லி மெடிக்கல் ஷாப் உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பல் கைது


பல்லாவரம்: பல்லாவரம் அருகே போலீஸ் எனக் கூறிக்கொண்டு மெடிக்கல் ஷாப் உரிமையாளரை துப்பாக்கி முனையில் கடத்திய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் அசாருதீன் (33). இவர் குரோம்பேட்டையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மெடிக்கல் ஷாப்பில் வியாபாரம் நன்றாக இருப்பதை தொடர்ந்து கவனித்து வந்த ஒரு கும்பல் 10 நாட்களாக அவரைப் பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 22-ம் தேதி அசாருதீன் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அதை நோட்டமிட்ட அக்கும்பல் காரில் வந்து திருநீர்மலை பிரதான சாலையில் அவரை மடக்கியது.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அசாருதீனிடம், தங்களை போலீஸ் என அறிமுகம் செய்திகொண்ட அந்தக் கும்பல், ''நீ சட்டவிரோதமாக மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அதனால் உன்னிடம் விசாரிக்க வேண்டும்'' என்று மிரட்டியுள்ளது. இதையடுத்து அவரது கண்ணைக் கட்டி பம்மல் அருகே உள்ள ஒரு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அசாருதீனை போலீஸ் தோரணையில் அடித்து உதைத்து விசாரணை நடத்தி இருக்கிறது அந்தக் கும்பல். பின்னர், ''நீ சட்ட விரோதமாக மருந்துகளை வாங்கி விற்பனை செய்வது எங்களுக்குத் தெரியும். அதனால் உன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க எங்களுக்கு ரூ.7.5 லட்சம் தரவேண்டும். இல்லையென்றால் உன்னை இந்த இடத்திலேயே என்கவுன்டர் செய்து விடுவோம்'' என்று மிரட்டியுள்ளது.

வந்திருப்பது போலி போலீஸ் என்று தெரியாமல் அவர்களின் மிரட்டலுக்கு பயந்து போன அசாருதீன், அவர்கள் கேட்ட தொகையை தருவதாக ஒத்துக்கொண்டு அந்தத் தொகையை இரண்டு மூன்று தவணைகளாக அந்தக் கும்பலுக்கு கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்தக் கும்பல் பணம் கேட்ட உடனே அசாருதீன் கொடுத்துவிட்டதால் அவரிடம் நிறைய பணம் இருக்கக்கூடும் என்று நினைத்து கடந்த 29-ம் தேதி மீண்டும் அந்த கும்பல் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது.

இந்த முறை தங்களுக்கு ரூ.30 லட்சம் பணம் வேண்டும் என்றும், தர மறுத்தால் உன்னை காலி செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த அசாருதீன், இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தியதில், பல்லாவரம் மீனாட்சி நகர், கலாதரன் தெருவைச் சேர்ந்த இம்ரான் (27), காஞ்சிபுரம் மிலிட்டரி சாலை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்(எ)சதாம்(28), பம்மல் கிருஷ்ணா நகர் 4- வது தெருவைச் சேர்ந்த சதீஷ் (29), பம்மல் கிரிகோரி ஸ்கொயர் பகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் பாபு (33), பெரும்பாக்கம் கார்மேகம் (38), ஜமீன் பல்லாவரம் லெட்சுமி காலனி பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் ராவ்(27), குன்றத்தூர் வேலாயுதம் தெருவைச் சேர்ந்த அந்தோணி ராஜ்( 36), சென்னை வஉசி நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் (40) மற்றும் கொல்லச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண் குமார்(40) ஆகியோர் தான் அசாருதீனை கடத்தி வைத்து பணம் பறித்தது எனத் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கை விலங்கு, வாக்கி டாக்கி, பொம்மை துப்பாக்கி, செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஒன்பது பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்தக் கும்பல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று தாம்பரம் அடுத்த ஓட்டேரி பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ள வினோத்குமார் (44) என்பவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அவர் பணம் கொடுக்க மறுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இந்தக் கும்பலைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர்கள், வினோத்குமாரை நடுரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்துள்ளனர்.