தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் சாலை மறியல்: தென்காசியில் 55 பேர் கைது 


தென்காசி: தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் நடத்திய சாலை மறியலில் தென்காசியில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தென்காசி மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சுதர்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் தீர்ப்பு வரும் வரை மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆரோக்கியராசு வரவேற்று பேசினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் போராட்ட விளக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட பொருளாளர் அருள்ராஜா நன்றி கூறினார். பின்னர், மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.