கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை குற்றவாளிகள் சிக்குவர்: இபிஎஸ் கருத்து


சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

மேட்டூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு வழக்கை சிபிஐ விசாரித்தால்தான், உண்மைக் குற்றவாளிகள் சிக்குவர் என்று என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

எடப்பாடியில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிர்இழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆனால், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரே விசாரிப்பார்கள் என்று முதல்வர்தெரிவித்துள்ளார். மேலும், சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க, அதிமுக முன்வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது தவறான தகவல்.

சாத்தான்குளம் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சிபிசிஐடி விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக் கப்பட்டது.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸார், கள்ளச் சாராய வழக்கை விசாரித்தால், உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடுவர். ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பல் வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வழக்கை சிபிஐதான் விசாரிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இதை தடுத்து நிறுத்துமாறு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வலி யுறுத்தி வருகிறேன். கள்ளச் சாராயத்தை தடுக்கக் கோரி அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, நாம் தமிழர் கட்சி துணைநின்றது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால், அதிமுக ஆதரவு கொடுக்கும்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் மக்களவையில் வலியுறுத்தவில்லை. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு இண்டியாகூட்டணி ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுகவுக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது மட்டுமே முக்கியமானது.

இவ்வாறு பழனிசாமி கூறினார்