நல்லம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை அகற்றம்: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதால், பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கண்டிகை: வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளி அருகே கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதால், கடை முன்பாக பொதுமக்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் ஊராட்சியில் வேங்கடமங்கலம் சாலையோரத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. பள்ளி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவிகளுக்கு, மதுபிரியர்கள் பலவிதங்களில் இன்னல்கள் அளிக்கின்றனர். இதுபோன்ற சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே பகுதியில் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்த டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என பொதுமக்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகபோராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, டாஸ்மாக் கடை நேற்று முதல் நிரந்தரமாக மூடப்பட்டது.

வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு, பட்டாசுவெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதேபோல், வேங்கடமங்கலம் பகுதியில் உள்ளடாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.