தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார் விபத்தில் டாக்டர் பரிதாப உயிரிழப்பு: மகனை கல்லூரியில் சேர்க்க வந்தவர் உட்பட 5 பேர் காயம்


குன்றத்தூர்: கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் ராபின் சாமுவேல்(40), மதுரவாயல் அடுத்த வேலப்பன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் டாக்டராகபணிபுரிந்து வந்தார். நேற்று பணியைமுடித்துவிட்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது டாக்டர் ஒட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரின் மீது ஏறி வேகமாகச் சென்று எதிர் திசையில் வந்த காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கின.

இதில் டாக்டர் ராபின் சாமுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். எதிர் திசையில் வந்த காரில் வந்தவர்கள் ரத்தக் காயங்களுடன் வலியால் துடித்தனர். உடனே அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்கள் மயிலாடுதுறையைச் சேர்ந்த முருகன்(42), இவரது மனைவி மேகலா(39), இவர்களது மகன் பிரசன்னா(22), மற்றொரு மூன்று வயது சிறுவன் மற்றும் காரை ஓட்டி வந்த கணேஷ் குமார்(36) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் முருகன் தனது மகனை சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்தபோது டாக்டர் வேகமாக ஓட்டி வந்த கார் மோதியதில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து இறந்த டாக்டரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.