‘அழ நாடு’ என்று அழைக்கப்பட்ட தேனி மாவட்டம்: மயிலாடும்பாறையில் கண்டெடுத்த கல்வெட்டில் தகவல்


கல்வெட்டு

வருசநாடு: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் ‘அழ நாடு’ என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியரான தொல்லியல் ஆய்வாளர் மூ.செல்வம், மன்னவனூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் பழனிமுருகன் ஆகியோர், மயிலாடும்பாறை பால்வண்ண நாதர் கோயிலில் ஆய்வு நடத்தினார். இதில், கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் மூ.செல்வம் கூறியதாவது: தேனி மாவட்டம் பண்டைய காலத்தில் ‘அழ நாடு' என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் நிர்வாகக் காரணங்களுக்காக இதனை பல வள நாடுகளாகப் பிரித்தனர். அதனடிப்படையில், மலைகள் சூழ்ந்த குறிஞ்சி நிலமான இன்றைய வருசநாடு அப்போது வரிசை நாடு என்று அழைக்கப்பட்டது. இந்த வரிசை நாட்டின் மிக முக்கியமான ஊர்களில் ஒன்றாக மயிலாடும்பாறை இருந்துள்ளது.

மூன்று வரிகள் கொண்ட இந்ததுண்டு கல்வெட்டில், மயிலாடும்பாறை ஊரின் பழைய பெயர் ‘ஒரோமில்' என்றும், அங்கு இருக்கும் இறைவனின் பெயர் ஒரோமிஸ்வரம் உடைய நாயனார் என்றும் அறிய முடிகிறது. இறைவனுக்கு, தினமும் அமுது படைப்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டதை இந்தக் கல்வெட்டு உணர்த்துகிறது.

கல்வெட்டில் குறிப்பிடப்படும் தொண்டைமானார் என்பவர்கள், பாண்டிய மன்னர்களின் வள நாடுகளை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள். அணுக்கிகள் என்பது பணிப்பெண்களை குறிக்கும். தினமும் பூஜைகள் செய்ய இவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது கல்வெட்டு மூலம் தெரிகிறது.

மயிலாடும்பாறை ஊரின் பழமையும், பாண்டிய மன்னர்களின் ஆட்சி இப்பகுதியில் செழித்து இருந்துள்ளதையும்இக் கல்வெட்டு உணர்த்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.