சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்


சாத்தூர் / சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பந்துவார்பட்டியில் செயல்படும் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்தவர் சகாதேவன் (55). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, பந்துவார்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 6 அறைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலைஓர் அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துக் கலவையை தொழிலாளர்கள் தயார் செய்தனர். அப்போது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் மருந்து கலவை தயாரித்த அறைமற்றும் அருகில் இருந்த இரு அறைகளும் இடிந்து தரைமட்டமாகின.

தொழிலாளர்கள் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), சூரங்குடி மாரிச்சாமி (40), சத்திரப்பட்டி மோகன்ராஜ் (35), செல்வகுமார் (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டிடஇடிபாடுகளில் சிக்கி அச்சங்குளத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (60) பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து வந்த சாத்தூர் தாலுகா போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில்ஈடுபட்டனர். இறந்த 4 தொழிலாளர்களின் உடல்களும், கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயமடைந்த ராமச்சந்திரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் பட்டாசு ஆலை முன் திரண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.வெடி விபத்து நேரிட்ட ஆலையை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறும்போது, பட்டாசு கலவையை தயார் செய்யும் அறையில் நேற்று முன்தினம் பணிமுடிந்து வேதிப்பொருட்களை முறையாக அப்புறப்படுத்தாமல் சென்றுள்ளனர்.

இதனால் நேற்று காலை மருந்துக் கலவை தயார் செய்தபோது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நேரிட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலை முறையாக அனுமதி பெற்று செயல்பட்டு வந்துள்ளது.

விதிகளை மீறும் பட்டாசு ஆலைகளைக் கண்டறிய 5 சிறப்புக் குழுக்கள் அமைத்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் உள்வாடகைக்கு விடப்பட்டது,

அனுமதிக்கப்பட்ட அளவைவிடஅதிக அளவில் மூலப்பொருட்கள் பயன்படுத்தியது உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பாக 80 பட்டாசுஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

இதற்கிடையில், விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சகாதேவன், அவரது மகன் குருசாமி பாண்டியன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

வெடி விபத்து தொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், அவர்களது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர், தலைவர்கள் இரங்கல்: ஆளுநர் ஆர்.என்.ரவி: பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: விருதுநகர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு மட்டும் 4-க்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல். பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதி செய்யப்படாததே விபத்துகளுக்கு காரணம். இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, வி.கே.சசிகலா உள்ளிட்டோர்,உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.