குறுவை சாகுபடி பாதிப்பு; ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்


சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவைசாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர்அணையில் இருந்து போதியதண்ணீர் திறந்துவிடாததால் பயிர்கள் கருகின. மேலும், பயிர்க் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு இழப்பீடு பெற முடியவில்லை.

உயர்த்தப்பட்ட பேரிடர் நிவாரணமாக ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என்றுமத்திய அரசு அறிவித்தது. ஆனால்,திமுக அரசு ரூ.13,500 மட்டும் வழங்கியது. இந்நிலையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. அவசர கோலத்தில் அறிவித்த குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தில், பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

ஜெயலலிதா ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், பயிர்கள் பாதிக்கப்பட்டபோது ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தினார்.

எனவே, தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பயிர்க் காப்பீடு நிவாரணமும் பெற்றுத் தரவேண்டும். அதேபோல, வேளாண் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.