மதுரை குழந்தைகள் பூங்காவில் சட்டவிரோத செயல்கள்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி


மதுரை: மதுரை குழந்தைகள் பூங்காவில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த பொழிலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை கே.கே.நகரில் ஏ.ஆர்.குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு சமூகவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பூங்கா கட்டிடத்தை ஆக்கிரமித்து உள்ளனர். கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.

இதனால் பூங்காவை சிறுவர், சிறுமியர் பயன்படுத்த முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஏ.ஆர்.பூங்காவை சுகாதாரமாக பராமரிக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அருள்வடிவேல் சேகர் ஆஜராகி, பூங்காவில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான புகைப்படங்களை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “குழந்தைகள் பூங்காவில் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் குடியிருப்புவாசிகள் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அங்கு உள்ள கட்டிடம் குறித்தும் அதிகாரிகளிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டதற்கு மழுப்பலாக மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளித்து உள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக இதுபோன்ற விஷயத்தை கையாள்கிறார்கள் உதாரணமாக இது அமைந்து உள்ளது. மேலும் அங்கு உள்ள கட்டிடம் ஆக்கிரமிப்பாளர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு உள்ளது.

எனவே ஏ.ஆர்.பூங்காவில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் இருந்து பூங்காவை மீட்க வேண்டும். மரங்கள், செடிகளுடன் பூங்காவை பராமரிப்பது குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் சார்பில் இந்த நீதிமன்றத்தில் ஜூலை 4-ம் தேதிக்குள் புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்