விநாயகர் கோயில் குளத்தை தூர்வார சென்னை ஆதம்பாக்கம் மக்கள் கோரிக்கை


ஆதம்பாக்கத்தில் உள்ள கன்னிமூல சங்கீத சக்தி விநாயகர் கோயிலின் மழைநீர் சேகரிப்பு திட்டக் குளம்

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள கன்னிமூல சங்கீத சக்தி விநாயகர் கோயிலின் மழைநீர் சேகரிப்பு திட்டக் குளத்தை பருவமழைக்கு முன்னதாகவே தாமதமின்றி தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் கிழக்கு கரிகாலன் முதல் தெருவில் கன்னிமூல சங்கீத சக்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகே உள்ள குளத்தில் தற்போது தண்ணீர் அறவே இல்லை. இந்த நிலையில் அந்த குளத்தை தூர்வாரி குளத்தின் கொள்ளளவை அதிகப்படுத்தினால் கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும். அத்துடன் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

இதுகுறித்து கிழக்கு கரிகாலன் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இந்த குளம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 163-வது வார்டில் இருந்தது. சென்னை மாநகராட்சி வார்டுகள் மறுவரையறையின் போது 161-வது வார்டு எல்லைக்குள் வந்துவிட்டது.

இந்த குளம், ஆலந்தூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 2014-15-ம் ஆண்டில் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மழைநீர் சேகரிப்பு திட்ட குளமாக மேம்படுத்தப்பட்டது. அதன்பிறகு முறையாக தூர்வாரி மேம்படுத்தப்படவில்லை. இப்போது குளத்தில் தண்ணீர் அறவே இல்லாததால் தூர்வாரி குளத்தின் கொள்ளளவை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்துக்கு அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் மேற்கூரையில் பெய்யும் மழைநீர் நேரடியாக அந்த குளத்துக்கு வரும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதுபோல இந்த குளத்தைச் சுற்றியுள்ள வீடுகளின் மேற்கூரையில் பெய்யும் மழைநீர் இந்த குளத்துக்குள் நேரடியாக வந்து சேரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த குளத்தில் தேங்கும் நீரை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த குளத்தை தூர்வாருவது தொடர்பாக 161-வது வார்டு உறுப்பினர் ரேணுகா சீனிவாசன் கூறியதாவது: கடந்த ஆண்டு ஆதம்பாக்கம் கன்னிமூல சங்கீத சக்தி விநாயகர் கோயில் குளத்தையும், ஆலந்தூரில் உள்ள முருகன் கோயில் குளத்தையும் ஆலந்தூர் ஆதம்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கம் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இலவசமாக தூர்வாரும் பணிகளை மேற்கொண்டது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக 3 நாட்களில் இப்பணிகள் முடிவுற்றது.

இந்தாண்டும் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போது சென்னை நகரில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி இருப்பதாகவும் அப்பணிகள் முடிவுற்றதும் கோயில் குளங்கள் தூர்வாரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்தாண்டு சென்னை மாநகராட்சி மட்டும் இப்பணியை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.