அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சர் உதயநிதி அறிவிப்பு


கோப்புப் படம்

சென்னை: அனைத்து மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சிகளுக்கும் ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். 22 சட்டப்பேரவை தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் அறிவித்துஉள்ளார்.

சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்:

சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின்கீழ் அரசு துறைகள், பொதுப்பணி துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும்.

கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.100 கோடியில் வழங்கப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்கள், விளையாட்டு அரங்கங்கள் ரூ.50 கோடியில் சீரமைக்கப்படும். அதன் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 2,300-ல் இருந்து 2,600 ஆக உயர்த்தப்படும். தினசரி உணவுப்படி ரூ.250-ல் இருந்து ரூ.350 ஆகவும், சீருடை மானியம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும், உபகரண மானியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்படும்.

சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளத்துடன் கூடிய முதன்மை நிலை பயிற்சி மையம், நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும். நாட்டில்முதல்முறையாக, அப்பல்கலைக்கழகம் அருகே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் சைக்கிள் பந்தயத்துக்கான பிரத்யேக ஒலிம்பிக் பை-சைக்கிள் மோட்டோகிராஸ் (BMX) ஓடுபாதை ரூ.12 கோடியில் அமைக்கப்படும்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நவீன வசதிகளுடன் உயர் செயல்திறன் மாணவர் விடுதி ரூ.25 கோடியில் அமைக்கப்படும்

திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி, ராமநாதபுரம் ஆகிய 22 சட்டப்பேரவை தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் ரூ.66 கோடியில் அமைக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் ‘டைவிங்’ வசதியுடன் ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும். கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதியநீச்சல் குளம், அரியலூர், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை ஹாக்கி ஆடுகளம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலை பயிற்சி, ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள், 37 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளுக்கு ரூ.5 கோடியில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ளஉடற்பயிற்சி கூடங்கள் குளிர்சாதனவசதியுடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு திறன் மேம்பாடு, அங்கீகார மையம் ‘STAR அகாடமி’ உருவாக்கப்படும்.

தேசிய மாணவர் படையினருக்கான ஊக்கத்தொகை ரூ.14 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக உயர்த்தப்படும். 30 நவீன ரக துப்பாக்கிகள் வழங்க நிதி உதவி அளிக்கப்படும்.

தமிழகத்தில் இளைஞர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் நல்லொழுக்கத்துடன் சமூகத்துக்கு உயரிய பங்களிப்பைஅளிக்க செய்வதன் முக்கியத்துவம் கருதி, புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும் என மொத்தம் 25 அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ளார்