குழந்தையை கடித்து குதறி காயப்படுத்திய தெருநாய் @ காஞ்சிபுரம்


குழந்தை நிர்மல்ராஜ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியில் தெரு நாய் ஒன்று குழந்தையின் வாய் பகுதி முழுவதும் கடித்துக் குதறிய சம்பவம் பதை பதைக்க வைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூரை அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் நிர்மல்ராஜ் (5). நேற்று இந்தச் சிறுவன் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று நிர்மல்ராஜ் மீது பாய்ந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய குழந்தை நிர்மல்ராஜ் கீழே விழுந்துள்ளான். அப்போது அந்த நாய், குழந்தையின் வாய்ப் பகுதி முழுவதையும் கொடூரமாக கடித்துக் குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆட்களைக் கண்டதும் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிறுவன் நிர்மல்ராஜை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சக்காக சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த சில மாதங்களாகவே காஞ்சிபுரம் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் நாய்க்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது 5 வயது சிறுவன் நாய்கடிக்கு ஆளாகி அவனது வாய் முழுவதும் கொடூரமாக காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் காஞ்சிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.