விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: களத்தில் 29 வேட்பாளர்கள்


விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 29 பேர் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல்மாதம் 6-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையம் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதையொட்டி, கடந்த 14 -ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 24-ம் தேதி மனுக்கள்மீதான பரிசீலனை நடைபெற்றதில், தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.

பாமக, நாம் தமிழர் கட்சிஆகியவை தேர்தல் ஆணையத்தில் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பாமகவுக்கு மாம்பழம்,நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.34 லட்சம் வாக்காளர்கள்: விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 749 ஆண்கள், 1 லட்சத்து 18 ஆயிரத்து 393 பெண்கள் மற்றும் 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 34 ஆயிரத்து 145 பேர்வாக்களிக்கின்றனர்.

வேட்பாளர் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, இன்றுமுதல் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 8-ம் தேதி பிரச்சாரம் ஓய்வடைகிறது.