கொடைக்கானல் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்து 21 பேர் காயம்


பெரியகுளம்: கொடைக்கானல் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்ததில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 21 பேர் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது பொம்மிநாயக்கன்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்(28), ஜாவீத் (22), அசார்(27), உமர்(27) உள்ளிட்ட பலரும் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வேன் மற்றும் பேருந்தில் சென்றனர்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு இன்று (புதன்) மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேன் கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை என்ற இடத்தில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தடுமாறிய வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பயணிகளும் விபத்தில் காயம் அடைந்த 21 பேரையும் மீட்டனர்.
பள்ளத்தாக்குப் பகுதியில் விபத்து ஏற்படாமல் பாறைப்பகுதியில் வேன் கவிழ்ந்ததால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

காயமடைந்த 3 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.