நெல்லை சாதி மறுப்பு திருமண விவகாரம்; சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு


சென்னை: கலப்பு திருமண விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சமீபத்தில் தாக்கப்பட்டது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்மீது பேசிய நாகை மாலி (மார்க்சிஸ்ட்), வானதி சீனிவாசன் (பாஜக), தி.வேல்முருகன் (தவாக), ஜவாஹிருல்லா (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), சிந்தனைச்செல்வன் (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி இருவேறு சமூகத்தை சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டு, முகநூல் பக்கத்தில் புகைப்படம் பதிவிடப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, மணப்பெண் குடும்பத்தினர் மறுநாள் கட்சி அலுவலகத்துக்கு சென்று, தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

புகாரின்பேரில், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, 14 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 7 பெண்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பெண் கல்வி, சமஉரிமை, சாதி மறுப்பு திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் முதலே ஆதரித்து வரும் இயக்கம் திமுக. இந்த அரசு பொறுப்பேற்றது முதல், இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூக குற்றங்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரப்படுகிறது.

இதற்கென சிறப்பு சட்டம் கொண்டு வருவதைவிட, நடைமுறையில் உள்ள சட்டப்படி, தீவிரமாக, வேகமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவது சரியானது என்று அரசு கருதுகிறது.

சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைவாகநடத்த, அரசு தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். விசாரணையை தீவிரப்படுத்தவும், வேகப்படுத்தவும் விசாரணை அலுவலராக காவல் ஆய்வாளருக்கு பதில், காவல் துணை கண்காணிப்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றங்களை குறைக்கும் வகையில், செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பதை மீண்டும் ஆய்வு செய்யப்படும்.