கள்ளக்குறிச்சி வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்க: எஸ்.பி.வேலுமணி


கோவை: கள்ளச்சாராய சம்பவத்தில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயம் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்பி.வேலுமணி தலைமை வகித்து பேசியதாவது: ''கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட அப்பாவி மக்கள் பலர் கள்ளச்சாராயத்திற்கு பலியாகி உள்ளனர். சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் கொடுத்தார். ஆனால் அவருக்கு பேசக்கூட வாய்ப்பு தரவில்லை.

கள்ளச்சாராயம் மட்டுமல்ல திமுக ஆட்சியின்போது தொடர்ந்து கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்ட கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதி அருகே தான் காவல்துறை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக அரசு தெரிவிக்கிறது. இச்சம்பவத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை வெளியே கொண்டு வர வேண்டும்.

சாராயம் காய்ச்சுவதற்கு மெத்தனால் உள்ளிட்ட பொருள்கள் ஆந்திராவில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், பின்னால் உள்ள அரசியல் சக்திகள் யார் என்பதை அறியவும் சிபிஐ விசாரணை கேட்கிறோம். சிபிஐ விசாரணை செய்யும் போது தான் உண்மை நிலை தெரிய வரும். முதல்வர் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கள்ளச்சாராய சம்பவத்தில் பலியான அப்பாவி மக்களின் குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போது சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.'' இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து திமுக அரசை கண்டித்தும், ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டியும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், எம்எல்ஏ-க்கள் தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.