தாம்பரத்தில் போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தாம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  போக்குவரத்து ஊழியர் சங்கம்  நிர்வாகிகள் | படம்: எம். முத்துகணேஷ்

தாம்பரம்: தாம்பரம் மாநகர் போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் தொழிற் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

தாம்பரம் மாநகர் போக்குவரத்துக் கழகம் பணிமனை நுழைவாயில் முன்பாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் போக்குவரத்து கழக பணிமனை துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இன்று காலை 10.00 மணி முதல் 24 மணி நேரம் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், ஆதம்பாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் பணிமனைகளில் இருந்து அரசாங்க போக்குவரத்துக் கழகம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்துக் கழங்களை பாதுகாக்க வரவுக்கும்- செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும், 2022 டிசம்பர் முதல் 18 மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வுக் காலம் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் 104 மாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், 01.04.2003க்கு பின்னர் பணியில் சேர்ந்தோருக்கு தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் வழங்க வேண்டும்.

பேட்டரி பேருந்து தனியார் மூலம் இயக்குவதை கைவிட்டு போக்குவரத்து கழகமே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலாவதியான பேருந்துகளை மாற்றி - புதிய பேருந்துகள் வாங்கிக் கொடுக்க வேண்டும், பேருந்து பராமரிப்புக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசுப் பணியாளர்கள் அனைத்து பிரிவிலும் நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்தப் பணியாளர் நியமனம் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.