ஓசூர் உழவர் சந்தையில் சில்லரை வியாபாரிகளுக்கு மொத்தமாக தக்காளி விற்பனை செய்வதால் நுகர்வோர் பாதிப்பு 


ஓசூர்: ஓசூர் உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சில்லரை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும் காய்கறிகள் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகா, கேரளா மாநிலத்திற்கு அனுப்புகின்றனர். கடந்தாண்டு தக்காளி சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யபட்டிருந்தது. அப்போது வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு தரம் இல்லாமல் தக்காளி விளைந்தது.

இதனால் மார்க்கெட்டில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் தக்காளி விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டாததால் உற்பத்தி முற்றிலும் குறைந்தது. இதனால் தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர மக்கள் கடும் பாதிப்படைந்தனர். அதே போல் நிகழாண்டும் மழையின்றி கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால், மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளதால், கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது.

இன்று உழவர்சந்தையில் ரூ,50 முதல் ரூ.70-க்கும், வெளி மார்க்கெட்டில் ரூ.80க்கும் விற்பனை செய்தது. இதனால் அன்றாட சமையலுக்கு தக்காளியைப் பயன்படுத்த முடியாமல் நடுத்தர பெண்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகளில் விற்பனைசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, ''தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்சியடைந்தாலும், அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மார்கெட்டில் வீணாகி கீழே கொட்டும் தக்காளி கூட ரூ.50 க்கு விற்பனை செய்கின்றனர். உழவர்சந்தையிலும் ரூ.70 க்கு தக்காளி விற்பனை செய்கின்றனர். ஆனால் காலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விற்பனை முடிந்து விடுகிறது.

சில்லரை வியாபாரிகள் தக்காளியை மொத்தமாக வாங்கி சென்று வெளியில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மட்டும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும். தொடர்ந்து தக்காளி விலை உயர்வால், தற்போது உள்ள நிலையில் வசதி படைத்தவர்கள் மட்டும் தக்காளியை பயன்படுத்தும் நிலை மாறி உள்ளது. எனவே வெளி மாநிலங்களிலிருந்து தக்காளியை கொள்முதல் செய்து நியாயவிலைக்கடைகளில் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்ய வேண்டும்'' என்றனர்

இது குறித்து தோட்டக்கலை துறையினர் கூறும் போது ''கடந்தாண்டை போல் நிகழாண்டும் விளைச்சல் பாதிப்பால் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஓசூர் உழவர் சந்தைக்கு வழக்கமாக தினமும் 5 முதல் 7 டன் தக்காளி வரத்து இருக்கும், ஆனால் தற்போது 3 டன் தக்காளி மட்டும் விற்பனைக்கு வருகிறது. தற்போது ஓரளவுக்கு மழை பெய்துள்ளதால் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர். அறுவடை செய்ய குறைந்த பட்சம் 6 மாதங்களாவது ஆகும். இதனால் தக்காளியின் விலை இதே நிலை தொடரும்'' என்றனர்.