மரக்காணம் கள்ளச் சாராய சம்பவத்திலேயே தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்?- நீதிபதிகள் கேள்வி


சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மரக்காணம் கள்ளச்சாராய சம்பவத்திலேயே அரசு பாடம் கற்றுக் கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.செல்வம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்தாண்டு மரக்காணத்தில் இதேபோல் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் பலியாகினர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏசெந்தில்குமார், இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி.யிடம் புகார்அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

அப்போதே அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்நேரம் இவ்வளவு பெரியதுயரச் சம்பவம் நிகழ்ந்து இருக்காது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி இன்னும் பல மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. கள்ளச்சாராயம் தயாரிக்க அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கள்ளச்சாராய வியாபாரியான கன்னுக்குட்டிக்கும், ஆளுங்கட்சி எம்எல்ஏ-க்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர்ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் கடந்தாண்டு நடைபெற்ற கள்ளச்சாராய சம்பவத்தில் 14 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021-ம்ஆண்டு எதிர்க்கட்சி ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜன் என்றகன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா, தாமோதரன் மற்றும் மதன்ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 117 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 பேரின் நிலைமைசீராக உள்ளது. எஞ்சியவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், “கடந்தாண்டு மரக்காணத்தில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகும் அரசு பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்,தற்போது கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு முன்பே கொண்டு வந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன், கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு கடந்த ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனைவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், “இந்த சம்பவத்தில் அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் இவ்வளவு உயிரிழப்புநேர்ந்து இருக்காது, இந்த சம்பவமும் தடுக்கப்பட்டு இருக்கும்” என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கள்ளக்குறிச்சி, மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்