கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்


சென்னை: சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி அளிக்காததால், அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அதிமுக, பாமக உறுப்பினர்கள் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்திருந்தனர்.

காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியதும், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அதிமுக உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர். கேள்வி நேரம்என்பதால் பேரவை தலைவர்அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அமளியில்ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்அனைவரும் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பிறகு, அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, “கேள்வி நேரத்தில் வேறு எந்த விஷயமும் பேசக் கூடாது, குற்றச்சாட்டும் எழுப்ப கூடாது என்பது அதிமுக உறுப்பினர்களுக்கும் தெரியும். இருந்தும் அவர்கள் பேசியது ஆச்சரியமாக உள்ளது. நான் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்காததால், வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

இதையடுத்து பேசிய பேரவைதலைவர் அப்பாவு, “கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அவர்களுக்கு கவனஈர்ப்பு தீர்மானத்தில் பேச வாய்ப்பு இருந்தது. எனினும், அவர்கள் நடந்து கொண்டது சட்டத்துக்கு புறம்பானது, வருந்தத்தக்கது” என்றார்.

இதையடுத்து, கேள்வி நேரம் நடைபெற்றது. நிறைவு கேள்வியின்போது குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 2001 டிசம்பரில் இதுபோன்ற நிகழ்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்து, 52 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எல்லோரும் கருத்து தெரிவித்தனர். பாமக தலைவர் ஜி.கே.மணி, தி.வேல்முருகன் ஆகியோர் 2022-ம் ஆண்டு அவையில் இதுகுறித்து பேசினர். தற்போது இந்த சம்பவம் குறித்து என் கவனத்துக்கு வந்ததும்,தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதையடுத்து, கேள்வி நேரத்துக்கு பிறகு, பேரவைக்குள் அதிமுக உறுப்பினர்கள் வரலாம் என்று பேரவை தலைவர் அனுமதி அளித்தார். இருப்பினும், அவை நடவடிக்கைகள் முடியும் வரை அதிமுக உறுப்பினர்கள் அவைக்குள் வரவில்லை