தென்காசி திமுகவில் ஓயாத கோஷ்டி கானம்: உள்ளாட்சி மன்றங்களில் உள்ளடி வேலை! 


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி மன்றங்களில் திமுகவுக்குள் நிலவும் கோஷ்டி பூசல்களால் ஒருவரை ஒருவர் வீழ்த்த முயற்சித்து வருவது ஆளும் கட்சியை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கிறது.

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக ரூ.2 கோடியே 76 லட்சம் ஒதுக்கீடு செய்வது குறித்து தீர்மானம் முன்வைக்கப்பட்டது. தீர்மானங்கள் குறித்து ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் விவாதித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரின் கணவர் சுபாஷ் சந்திரபோஸ் புகையிலைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய திமுகவைச் சேர்ந்த உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவரின் ஆதரவு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருவருக்கொருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்து மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தமிழ்ச்செல்வி கூட்ட நிகழ்வில் பங்கேற்காமல் திடீரென எழுந்து வெளியே சென்றார். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி பதவி வகிக்கும் நிலையில், உட்கட்சி பூசல் காரணமாக திமுக கவுன்சிலர்களே அவருக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், திமுகவைச் சேர்ந்த கடையநல்லூர் நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மானுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் உட்பட 29 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு அளித்தனர். இதேபோல் கடையநல்லூரில் திமுக ஒன்றியக்குழு தலைவர் சுப்பம்மாளுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.