சென்னையில் அதிகரித்த லாரி குடிநீர் விநியோகம்: 3 மாதங்களில் 3.48 லட்சம் லாரி நடைகள் இயக்கம்


சென்னை: கடந்த மூன்று மாதத்தில் சென்னை குடிநீர் வாரியம் லாரிகள் மூலம் 3,48,560 நடைகள் இயக்கி சென்னை மாநகர மக்களுக்கு அயராது குடிநீர் விநியோகம் செய்துள்ளது.

நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகம் இன்றியமையாததாக உள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் விநியோக பணியை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகித்தாலும், குடிநீர் குழாய் அமைக்க வாய்ப்பில்லாத இடங்களில் 8 ஆயிரத்து 500 குடிநீர் டேங்குகளை சென்னை குடிநீர் வாரியம் நிறுவியுள்ளது. லாரிகள் மூலமாக இந்த டேங்குகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது.

மேலும், குடிநீர் டேங்குகளை நிறுவ முடியாத மற்றும் குடிநீர் குழாய்களை பதிக்க முடியாத 920 சாலைகளில் வீடு வீடாக லாரியை நிறுத்தி குடிநீர் விநியோகிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. இச்சேவைகளுக்காக தினமும் சுமார் 3 ஆயிரத்து 100 நடைகளுக்கு மேல் குடிநீர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் குடியிருப்புகளைக் கொண்ட கட்டிடங்களுக்கு கட்டண அடிப்படையிலும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி குடிநீர் வீடுகளுக்கு ரூ.475, வணிக நிறுவனங்கள் இடம்பெற்ற குடியிருப்புகளுக்கு ரூ.735, 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் முறையே ரூ.700, ரூ.1050, 16 ஆயிரம் லிட்டர் குடிநீர் முறையே ரூ.1200, ரூ.1785 கட்டணத்தில் விநியோகிக்கப்படுகிறது.

சென்னையில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், குடிநீர் தேவையும் அதிகரித்தது. அதனால் பொதுமக்களும், அரசுத் துறைகளும், அதிக அளவில் லாரி குடிநீர் கோரி பெற்றுள்ளனர். அதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் லாரி குடிநீர் நடைகளும் அதிகரித்துள்ளன.

குடிநீர் தொட்டிகளுக்கு விநியோகிப்பது, வீடு வீடாக சாலைகளில் குடிநீர் விநியோகிப்பது, அரசு அலுவலகங்களுக்கு விநியோகிப்பது, கட்டண அடிப்படையில் விநியோகம் என மார்ச் மாதம் 1,14,520 நடைகள், ஏப்ரலில் 1,15,223 நடைகள், மே மாதத்தில் 1,18,817 நடைகள் என மொத்தம் 3,48,560 நடைகள் இயக்கப்பட்டன. கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாரி நடைகளில் எண்ணிக்கை மாதத்துக்கு 1 லட்சத்தைக்கூட தாண்டவில்லை என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.