சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: குவைத், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி


சென்னை: சட்டப்பேரவையின் முதல் நாள்கூட்டத்தில், மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மற்றும் குவைத் தீ விபத்து, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, மக்களவை தேர்தல் காரணமாக, துறை வாரியாக நிதி ஒதுக்கும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படாமல் அவை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை நேற்று கூடியது.இதில் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இரங்கல் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களான எஸ்.மாணிக்கராஜ்(நாங்குநேரி), இ.ரவிக்குமார் (பொன்னேரி), வி.தனராஜ் (வந்தவாசி), வ.சின்னசாமி (சேந்தமங்கலம்), எ.ராமகிருஷ்ணன் (அச்சிறுப்பாக்கம்), அ.கணேசமூர்த்தி (மொடக்குறிச்சி), சு.சிவராமன் (சின்னசேலம்), ச.வேணுகோபால் (ஆர்.கே.நகர்), ஆ.கு.சீ.அன்பழகன் (பெரணமல்லூர்), ஆர்எம்.வீரப்பன் (திருநெல்வேலி, காங்கேயம்), ஆர்.இந்திரகுமாரி (நாட்றம்பள்ளி), எச்.எம்.ராஜு (ஊட்டி), சி.வேலாயுதன் (பத்மநாபபுரம்), தா.மலரவன் (கோவை மேற்கு மற்றும் வடக்கு), தா.ராசாம்பாள் (தலைவாசல்), மொ.பரமசிவம் (வானூர்), சி.ராமநாதன் (விருதாச்சலம்) ஆகியோர் மறைவு தொடர்பான இரங்கல் குறிப்புகளை பேரவை தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

இரங்கல் தீர்மானம்: குவைத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை பேரவை தலைவர் வாசித்தார். சமீபத்தில் மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

பேரவையில் இன்று: சட்டப்பேரவையில் இன்று முதல், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்று நீர்வளம்,தொழிலாளர் நலம், வீட்டுவசதி, மதுவிலக்கு, மாற்றுத் திறனாளிகள் நலம், சமூகநலம் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம், மாஞ்சோலை எஸ்டேட் பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டு, பேரவை செயலகத்தில் அதற்கு கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.