சாலை அமைத்ததற்கான தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்ட அதிகாரிகள் இருவர் கைது @ சேலம்


சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாலை அமைப்பதற்கான பில் தொகையை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் , தலைவாசல் அருகே வரகூர் பகுதியில் கருப்பாயி காண்ட்ராக்டர் நிறுவனத்தை நடத்தி வருபவர் செந்தில்குமார் . இவர் சாலை ஒப்பந்த பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றார். இந்நிலையில், தலைவாசல் அருகே தெற்கு மணிவிழுந்தான் பகுதி மற்றும் தலைவாசல் ஆகிய இரு பகுதிகளில் அரசு திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்து ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தார்.

இதற்கான பில் தொகை ரூ.90 லட்சத்தை விடுவிப்பதற்கு சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் இளநிலை வரைபட அலுவலர் சாகுல் ஹமீது ஆகியோர் ஒரு சதவீதம் லஞ்சம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ரூ.50 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில், மேலும் ரூ.61 ஆயிரம் லஞ்ச பணம் தரச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே ரூ.50 ஆயிரம் தந்த நிலையில் இதற்கு சம்மதிக்காத செந்தில், இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜர், காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், ராஜேந்திரன், ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

அப்போது , ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ரசாயனம் தடவிய ரூ.61 ஆயிரத்தை ரவிச்சந்திரன் மற்றும் சாகுல் அமீதிடம் வழங்கும்போது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும், அலுவலகக் கிடங்கில் ரூ.1,21,000 கணக்கில் வராமல் இருப்பதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், இளநிலை வரைபட அலுவலர் சாகுல் அமீது ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.