கோவை - சென்னை ‘கோவை விரைவு ரயில்’ ஜூன் 26 வரை பெரம்பூர் வரை மட்டுமே இயக்கம்


சேலம்: கோவை - சென்னை இடையிலான கோவை விரைவு ரயிலானது, வரும் 26-ம் தேதி வரை கோவை - பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடைமேடை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான (கோவையில் மதியம் 3.15 மணிக்குப் புறப்படும்) கோவை விரைவு ரயிலானது (எண்.12676), நேற்று முதல் வரும் 26-ம் தேதி வரை, கோவை- பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை- சென்னை சென்ட்ரல் இடையிலான (கோவையில் இரவு 11.30 மணிக்கு புறப்படும்) வாராந்திர விரைவு ரயிலானது (எண்.12682), இன்று (21-ம் தேதி) முதல் நாளை (22-ம் தேதி) வரை, சென்னை கடற்கரை ரயில் நிலையம் வழியாக மாற்றி இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.