ஓபிஎஸ்-ஐ யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அதிமுக பொது செயலாளர் பழனிசாமி திட்டவட்டம்


தஞ்சாவூர்/நாகப்பட்டினம்: ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ரூ.78.67 கோடி ஒதுக்கியுள்ளதாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது. அதில்ரூ.24.05 கோடி தேசிய வேலைஉறுதித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.54.17 கோடிதான் விவசாயிகளுக்கு கிடைக்கும். எனவே, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

கடந்த முறை திமுக கூட்டணியில் 38 பேர் எம்.பி.யாக இருந்தனர். அப்போதே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வுக்கு பரிகாரம் தேடியிருக்கலாம். தற்போது 40 எம்.பி.க்கள் உள்ளனர். இப்போதாவது தமிழக மக்கள்சார்பில் அழுத்தமாக குரல்கொடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும். ஆனால்,நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்திருப்பது கண்துடைப்பாகும். இங்கு போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.5.18 லட்சம் கோடி கடன் இருந்தபோது, மக்களை கடன்காரர்களாக்கி விட்டார்கள் என்று திமுக விமர்சித்தது. தற்போது திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3.50லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிராகப் போட்டியிட்டவர். அவர் எப்போதும் கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர், சுயநலம் மிக்கவர். ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்த அவரை, அதிமுகவில் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு பழனிசாமி கூறினார்.

அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என சசிகலா கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ‘‘இத்தனை நாட்களாக யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள்? இந்தக்கட்சியை காப்பாற்றிக் கொண்டிருப்பது தொண்டன்தான்’’ என்றார்.

முன்னதாக, நாகை அதிமுக அலுவலகத்தில், அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிநடைபெற்றது. அவர்கள் மத்தியில் பழனிசாமி பேசும்போது, "வரும்2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதியிலும் அதிமுக வெற்றிபெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என்றார்